தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கு 2 வருடங்களாகலாம்

பாராளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் தற்போதய பொருளாதர நிலவரம், மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் உரையாற்றி வருகிறார்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய நாள் முழுவதும் விவாதம் நடத்தப்படவுள்ளதாக கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், விவாதம் நடைபெறவுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தனது உரையில் 51 பில்லியன் டொலர்கள் கடனாக காணப்படுவதாக தெரிவித்த நிதியமைச்சர், கடந்த காலங்களில் சகல அரசாங்கங்களும் வாங்கிய கடன்களே ஒன்று சேர்ந்து இந்த கடன் தொகை சேர்ந்துள்ளதாக தெரிவித்துளளார்.

வரிகளை குறைத்தது வரலாற்று பிழையென தெரிவித்த அலி சப்ரி, அது அரசாங்கத்தின் பிழையென தெரிவித்தார். அத்ததோடு கடன்களை வாங்கி கடன்களை மீள செலுத்தியுள்ளதாகவும், அதிக வட்டிக்கு கடன்கள் வாங்கியுள்ளமையினால் மேலும் கடன்கள் அதிகரித்து செல்வதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் அந்தந்த காலத்தில் மக்களுக்கன சலுகைகளை வழங்கி சந்தோசப்படுத்தியதாகவும், பணத்தினையும், கடன்களையும் சரியான வகையில் முகாமைத்துவம் செய்யவில்லை எனவும் தனது உரையில் தெரிவித்தார்.

கொரோனா மற்றும் ரஸ்சியா-உக்ரைன் போரின் காரணமாக டொலர் விலையேற்றம் போன்ற காரணங்களினால் பொருளாதர வீழ்ச்சி ஏற்பட்டுளளதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசசுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் தற்போதைய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியாது எனவும், அனைவரும் ஆதரவு வழங்கினால் குறைந்தது இரண்டு வருடங்களில் பிரச்சினைகளை தீர்க்க முடியுமெனவும், இல்லாவிட்டால் ஐந்து வருடங்கள் சென்றாலும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் கூறினார்.

தான் பொருளாதர நிபுணர் அல்ல எனவும் மேலதிகமாக கிரிக்கெட்டில் விக்கெட்டை காப்பாற்றும் நைட் வோட்ச்மன் போன்று செயற்படுவதாகவும், இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இருந்தால் வந்து இந்த அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தனது உரையில் கூறியுள்ளார். மேலும் தற்போதைய கடன் ஏற்பாடுகள் தொடர்பிலும், பொருளாதர ஏற்பாடுகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

தற்போதைய ஏற்பாடுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதம் வரையிலான எரிபொருள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும், அதற்கு பின்னர் எரிபொருள் ஏற்பாடுகள் செய்யப்பபடவேண்டுமெனவும் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி திட்டத்துக்குள் செல்ல குறைந்தது 6 மாதங்களாவது தேவைப்படுமெனவும், இந்த வருடத்துக்குள் நாட்டை எடுத்து செல்ல 3 தொடக்கம் 4 பில்லியன் டொலர்கள் தேவைப்படுமெனவும், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் நாடுகளோடும், சர்வதேச அமைச்சுகளோடு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கு 2 வருடங்களாகலாம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version