பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியினை இராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்ததாக ஊடக துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி நாலாக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியிருந்தார்.
ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டின் சிக்கல்களை தீர்த்து, மாற்றத்தை உருவாக்கவும், நாட்டை பாதுகாப்பதிலும் அக்கறையாக உள்ளனர் என்பதனை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலாக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என நம்பப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனது பதவியினை இராஜினாமா செய்ய அந்த இடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டு, அவரே பிரதமராகவும் நியமிக்கப்படுவாரென ஊடகம் ஒன்று தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளது.