நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான துரதிஷ்ட நிலைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலமாக அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு திட்டமிடப்பட்ட வகையில் குண்டர் தாக்குதல் தொடுத்தலை எந்தவொரு நாகரீக சமூகமும் அங்கீகரிக்காது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பேற்கவும் பொறுப்புக்கூறவும் வேண்டிய ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும். இதைத் தவிர வேறு தீர்வுக்கு இப்போதைக்கு இடமில்லை என்பதை வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதும், குண்டர்களை அலரிமாளிகைக்கு வரவழைப்பதும்,அவர்களை வழிநடத்தி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம மீது தாக்குதல் நடத்தியதும், இந்த சட்டவிரோத நடவடிக்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட தன்மையை உறுதிப்படுத்துகிறது.
எனவே பிரதமர் மாத்திரமின்றி ஜனாதிபதியும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அதுவே மக்களை அமைதியாக செயற்பட வழி வகுக்கும் என கூறியுள்ள அவர் இந்நேரத்தில் அனைவரும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.