வடக்கில் வன்முறையை தூண்டவேண்டாம் – அங்கஜன்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் எரிக்கப்பட்டது என வெளியாகும் செய்திகள் தவறானவை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அலுவலகம் எரிக்கப்படவில்லை எனவும், அலுவலக பதாதையிலும் சிறு பகுதி மாத்திரமே தீ மூட்டப்பட்டுள்ளது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்செயலூடாக யாழில் வன்முறையை தூண்டி குளிர்காய நினைப்பவர்கள் தமது அரசியல் கோழைத்தனத்தை கைவிட வேண்டும். வரலாறு சொல்லும் தமிழர் வீரங்கள் இந்த கோழைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுளள்து.

“யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். தமது அரசியல் தேவைக்காக உசுப்பேற்றுபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.இங்கு வன்முறைகள் இடம்பெற்றால் பாதிக்கப்படுவது எங்கள் மக்களே. நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள்” என்ற வேண்டுகோளையும் அங்கஜன் முன் வைத்துள்ளார்.

நாட்டில் அமைதிவழி போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளை நாம் கண்டித்துள்ள நிலையில் எம்மீது தாக்குதல் நடாத்தி தமது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை ஒரு தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நாட்களில் நாட்டின் அமைதி நிலவும் பகுதிகளாக வடக்கு மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் இருக்கும்போது நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் அவசரகாலச்சட்டம், பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கருத்தில்கொள்ளாது இந்த அமைதியை சீர்குலைத்து அதனூடாக தமக்கான நிதிமூலங்களை பலப்படுத்தும் நோக்கில் சில அரசியல் கட்சிகளாலும், அதன் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட சமூகவிரோத செயலே இதுவாகும் என மேலும் குற்ற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“இந்த சம்பவத்தை காட்டிக்கொடுத்து எங்கள் இளைஞர்களை நாம் எப்போதும் நெருக்கடிக்குள் சிக்கவைக்க மாட்டோம். ஆனால் இந்த கீழ்த்தரமான அரசியல் வலைக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று எனதருமை யாழ் மாவட்ட மக்களை முதலில் கேட்டுக்கொள்கின்றேன்.

நாட்டில் அமைதிவழி போராட்டகாரர்களை பாதுகாக்கும் செயலில் தெற்கிலுள்ள சட்டவல்லுனர்களும், புத்திஜீவிகளும் திரண்டுநிற்கும்போது, இங்குள்ள சிலர் சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் கருத்துக்களை வெளிப்படுத்திவருவதானது எத்தகைய மனப்பாங்கை அவர்கள் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply