பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(16.05) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் தான் நாடு மிக மோசமாக இருக்கும் நிலையில் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்காக பதவியினை ஏற்றுள்ளேன். நான் இந்தப் பதவியினை கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வாங்கிய அதிக கடன்கள் மற்றும் அதிகரித்த செலவினங்கள் மூலமாக இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான செலவினங்கள் 4000 பில்லியனை எட்டியுள்ளதாகவும், 3300 பில்லியன் டொலர்கள் இனிவரும் காலத்துக்காக தேவைப்படுவதாகவும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். 2300 பில்லியன் டொலர்கள் குறைவாக காணப்படுவதாக மேலும் கூறியுள்ளார். அத்தோடு புதிய பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனிவரும் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் மோசமான காலமாக உங்களுக்கும், எனக்கும் அமையவுள்ளது என தெரிவித்த பிரதமர் தான் மக்களுக்கு பொய்களை சொல்லமாட்டேன் எனவும், நாட்டின் உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. டீசல் தொடர்ந்தும் வருகை தரவுள்ளது. பெற்றோல் இம்மாதத்துக்குள் இரண்டு கப்பல்களில் வருகை தரவுள்ளது. அத்தோடு ஒயில் கப்பல்கள் இரண்டு துறைமுகத்தில் 40 நாட்களாக தரித்து நிற்கின்றன, அவற்றுக்கான டொலர் திறந்த முறையில் கட்டப்படவுள்ளது.

எரிபொருள் சிக்கல்கள் காரணமாக மின்சாரம் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை தடை செய்யும் நிலை ஏற்படும். சமையல் எரிவாயுவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருந்து தட்டுப்பாடு மிக மோசமாக காணப்படுகிறது. வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான 34 பில்லியன் டொலர்கள் இன்னமும் கட்டப்படவில்லை. இறக்குமதி செய்யப்பட்ட 4 மாத மருந்துகளுக்கான கட்டணங்கள் இன்னமும் செலுத்தப்பபடவில்லை. இதன் காரணமாக மருந்துகள் சம்மேளனம் இலங்கை மருத்தாக்கள் கூட்டுத்தாபனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவுள்ளன. முக்கியமான 14 மருந்துகள் கையிருப்பில் இல்லை. இதய அழுத்தத்துக்கு பாவிக்கும் முக்கியமான மருந்துகள் இல்லை.

விமான நிலையத்துக்கு மிக மோசமான நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தனியார் மயமாக்கல் மூலமாக இந்த நஷ்டத்தை ஈடுகட்ட முடியும். இந்த நட்டம் விமானத்தில் ஒரு போதும் ஏறாதவர்களையும் கூட பாதிக்கிறது.

வரும் காலம் மிக மோசமான கஷ்டத்தை நாட்டுக்கு வழங்கவுள்ளது. அதிலிருந்து மீள அனைவரும் அர்ப்பணிப்போடு செயற்படவேண்டும். விட்டு கொடுப்புகளை செய்ய வேண்டும். வெளிநாடுகளோடு பேசி வருகிறோம். நேச நாடுகள் எமக்கு உதவி செய்வதாக கூறியுள்ளன. அவர்களின் உதவியின் மூலம் நாட்டை மீடடெடுக்க முடியும்.

செய்ய முடியாத கடினமான பணியினை நான் ஏற்றுள்ளேன். ஆணி வைக்கப்பட்ட கழட்டமுடியாது சப்பாத்துகளை நான் அணிந்துள்ளேன். இந்த கடினமான பணியினை மக்களுக்காக செய்வேன். இந்த பதவியின் மூலம் தனி நபர்களையோ, குடும்பத்தையே காப்பாற்ற செயற்படமாட்டேன் என உறுதியளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பிரச்சினைகளற்ற நாட்டையும், வரிசைகளற்ற இளைஞர்களுக்கான நாட்டையும் வழங்க வேண்டும். அன்றாடம் வேலை செய்யும் ஊழியர்கள் வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்காமல் மூன்று வேளையும் நிம்மதியாக உணவுண்ணும் நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்துக்கு பதிலளித்த சகல அரச கட்சிகளுக்கும் நன்றிகளை தெரிவித்த பிரதமர் ரணில், சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு சபை உருவாக்கப்பட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதமர் \தனது உரையில் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version