எரிபொருள் நிலைவரம் தொடர்பிலான அறிவிப்பு

சப்புகஸ்கந்தை எண்ணை சுத்திகரிப்பு நிலைய பணிகள் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். கச்சாய் எண்ணை கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும், அதனை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்தை பணிகள் ஆரம்பித்து 06 தினங்களில் எரிபொருளை தயாரித்து வழங்க முடியுமென மேலும் கூறியுள்ளார். சப்புகஸ்கந்தை பணிகள் மார்ச் மாதம் 20 ஆம் திகதி நிறுத்தப்பட்டது. பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் நிலையை தீர்க்க கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்களை நிரப்பும் வாகனங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கான செல்லிடப்பேசி செயலி பொலிஸ் கணினி தொழில் நுட்ப பிரிவினால் தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர கூறியுள்ளார்.

வாகனங்களின் இலக்கங்களை பதிவுசெய்வதன் மூலம், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிவிட்டு இன்னுமொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை அதே வாகனம் நிரப்பினால் அதனை அறிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிர்ப்பும் நபர்கள் தொடர்பில் அறிய முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இரவுப் பொழுது இலங்கையில் நிலுவையிலுள்ள எரிபொருள் தொடர்பிலும் அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் படி 23022 மெற்றிக் தொன் டீசல், 2588 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கையிருப்பிலுள்ளன.

92 ரக பெற்றோல் 39968 மெற்றிக் தொன்னும், 95 ரக பெற்றோல் 7112 மெற்றிக் தொன்னும், விமான பெற்றோல் 3578 மெற்றிக் தொன்னும் கையிருப்பிலுள்ளன.

கூறப்பட்டுள்ள விடயங்கள் யாவும் சரியாக நடைபெற்றால் எரிபொருள் வரிசைகள் குறைவடையும் நிலை ஏற்படலாம். இலங்கையின் சில பகுதிகளில் வரிசைகள் குறைவடைந்துள்ளதாக அறிய முடிந்தாலும் பல பகுதிகளில் எரிபொருள் வரிசை மேலும் அதிகரித்து வருவதாகவும், எரிபொருள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிலைவரம் தொடர்பிலான அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version