வட மாகாணத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் KKS இற்கு

இந்தியாவிலிருது இலங்கைக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சிறுபோகத்துக்கு தேவையான உரங்களை யாழ்ப்பாணம், காங்கேசன் துறை துறைமுகத்தில் இறக்கி மக்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக கடற்றொழில் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையின், வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து செலவினை குறைக்க முடியுமென்ற கருத்தை அண்மையில் அமைச்சர் டக்ளஸ் முன் வைத்திருந்தார்.

சென்னையிலிருந்து வரும் கப்பல் இலங்கையை சுற்றி, கொழும்பு சென்று அங்கே பொருட்கள் இறக்கப்பட்டு, தரை மார்க்கமாக வட மாகாணத்துக்கு எடுத்து வருவதிலும் பார்க்க நேரடியாக சென்னையிலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை கொண்டுவந்தால் போக்குவரத்து செலவு பாரியளவில் குறைவடையுமென அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதனடிப்படையில் தொலைபேசியூடாக நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடி அதற்கான சம்மதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

“இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது” என வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் KKS இற்கு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version