கடந்த மே மாதம் 31 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்த மாணவனின் கண்களை பாவித்து சத்திர சிகிச்சை மேற்கொண்டதில் இருவருக்கு பார்வை கிடைத்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த 16 வயதான மாணவனது இறுதி சடங்கு நடைபெறுவதற்கு முன்னர் அந்த மாணவனின் கண்களை கொடையாக பெற்றவர்கள் பார்வையினை பெற்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனுராதபுரம், கலென்பின்டுனுவெவ பகுதியை சேர்ந்த டக்சித இமேஷ் தனபால என்ற மாணவன் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளினால் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் பெற்றோர் கண்களை தானம் செய்த நிலையிலேயே அவரின் கண்கள் பார்வையின்றி காணப்பட்ட இரு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டன.
பல நூற்றுக்கணக்கானவர்கள் இதே போன்ற கண்களை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், இந்த செயற்பாடானது பாராட்டுதலுக்கு மிகச் சிறந்த செயற்பாடென அனுராதாபுரம் கண் தான அமைப்பின் அதிகாரி W.M.S. சந்தன தெரிவித்துள்ளார்.
உடற் பாகங்கள் தானம், கண் தானம் என்பன மிக முக்கியமானது. இறந்த பின்னர் யாருக்கும் பயன் இல்லாமல் போகும் உடற் பகுதிகளை, தானம் செய்வதனால் வேறு யாரவது ஒருவருக்கு மீள் வாழ்க்கை ஒன்று கிடைக்கும். பார்வை கிடைக்கும். இலங்கையில் உடற் பாகங்கள் தானம் செய்தல், கண்களை தானம் செய்தல் போன்றன செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன. விருப்பமானவர்கள் அதனை செய்யுங்கள். இன்னுமொருதருக்கு வாழ்க்கை கொடுங்கள்.
