முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், இன்றையதினம்(12.06) முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஸ்டை செய்வதற்கும் , அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் போராட்டம் காரணமாக குறித்த நிகழ்வு நிறுத்தப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் எவ்வித மதக் கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலேயே முப்படைகளின் பங்குபற்றுதலோடு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் சொகுசுவாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகைதந்திருந்தாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க
“குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப் பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலைகளையே தாம் முன்னெடுப்பதாகவும், அங்கு புதிதாக கட்டுமானங்களை கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு தமது திணைக்களத்துக்கும் , பௌத்த துறவிகளுக்கும், இராணுவத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் முன்பிருந்ததைவிட குருந்தூர் மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர் மலையில் பெருமளவான, பௌத்த பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
