உங்கள் நிலையை அறிந்து வீர வசனம் பேசுங்கள் – டெலோ பேச்சாளர்.

சரத் வீரசேகர அவர்கள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால் தானோ? என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

“சிங்கள மக்களின் அமைதியை குலைத்தது தமிழர்கள் அல்ல, அம்மக்களை ஏமாற்றிய சிங்கள பௌத்த வேடதாரிகள் என அந்த மக்களே தெளிவாக கூறியுள்ளனர். தாங்கள் தெருவில் இறங்கி சிங்கள மக்களுடன் சகஜமாக உரையாட முடியுமா? அவர்களின் அமைதியைக் குலைத்தது நீங்கள்தான். அவர்கள் பொறுமையை தமிழ்மக்கள் சோதிக்கவில்லை என சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதவாதத்தி்ன் பின்னால் ஒழித்து பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு இனி மக்கள் மசிய மாட்டார்கள். குருந்தூர் மலை புராதன தமிழர் பிரதேசம். அப்பிரதேச மக்களின் காணிகளை அபகரித்து, நீதிமன்ற உத்தரவையும் மீறி, நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர் கொண்டிருக்கும் வேளையில் புத்தர் சிலை அமைப்பதற்கான அவசியம் என்ன? என கேள்வியெப்பியுள்ள சுரேந்திரன்,

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து நமது இன குடிப்பரம்பலில் சிதைத்து நமது தாயகக் கோட்பாட்டை மழுங்கடிக்கும் இன அழிப்பு நடவடிக்கையே இதுவாகும் என குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். அப்பிரதேச மக்களே அந்தப் போராட்டத்தில் அவரோடு கலந்து கொண்டவர்கள். ஆனால் அங்கு பெளத்த விகாரை அமைக்க வந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அந்தப் பிரதேசத்தை சாராதவர்களே அங்கு வந்திருந்தார்கள்.

தொல்லியல் ஆணைக்குழு அதிகாரிகள் வேறு மதத்தினரின் புராதன சின்னங்களை மீளக் கட்டி அமைப்பதற்கு என்றாவது முயன்றிருக்கிறார்களா?

பௌத்த மதச் சின்னங்களை மீள கட்டுவதற்கு மாத்திரமே துணை போகிறார்கள்.
இப்படியான நடவடிக்கைகள் தான் மக்கள் அமைதியை குலைக்கும் செயல் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள சுரேந்திரன்,

இதை நியாயப்படுத்தும் நீங்கள் அமைச்சுப் பதவிக்கு அல்ல பாராளுமன்ற பதவிக்கே தகுதியற்றவர் என்பதை சிங்கள மக்களே தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் நீங்கள் அமைச்சுப் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டீர்கள். உங்கள் நிலையை புரிந்துகொண்டு வீர வசனங்களை பேச வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நீங்கள், உங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக அவர்களுடைய அமைதியை தமிழர்கள் குலைக்க முற்படுவதாக பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் உங்களுடைய கபடத்தனம் இனிமேலும் பலிக்காது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் இன குடிப்பரம்பலில் சிதைக்கும் எந்த நடவடிக்கைக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். போராடுவோம். தடுத்து நிறுத்துவோம். அது தமிழ் மக்களின் உரிமை. இது சிங்கள மக்களின் அமைதியை சோதிக்கும் விடயமே அல்ல என்பதை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நிலையை அறிந்து வீர வசனம் பேசுங்கள் - டெலோ பேச்சாளர்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version