போராட்ட குழுக்களிடம் தமிழர் தேசிய அபிலாஷைகளை காணவில்லை – மனோ கணேசன்

“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என முன்னிலை சோஷலிச கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் கூறுகிறார். இதுவே எமது கொள்கையாகவும் இருக்கிறது. இதனாலேயே நாம் எப்போதும் ராஜபக்ச அரசியல் கலாச்சாரத்தை எதிர்த்து வந்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த உத்தேச புதிய அரசியல் கலாச்சாரம், தமிழர் அபிலாஷைகளையும் வெறும் ஒருசில கோஷங்களுக்கு அப்பால் சென்று, கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதை போராட்டக்காரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு குமார் குணரத்தினத்தின் முன்னிலை சோஷலிச கட்சியும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் சட்டங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி உருவாகியுள்ளது. அந்த சக்தியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகின்றது. அது உண்மை. ஆனால், இதே விதமான சட்டத்துக்கு அப்பால் சென்றுதான், கடந்த காலங்களில் தமிழர்கள் ஒடுக்கு முறையை சந்தித்தார்கள். இப்போதும் சந்திக்கிறார்கள்.

ஆகவே மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சபைகள் உருவாக்கப்படட்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தீர்வுகள் வரட்டும். நாமும் அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஆனால் சட்டங்கள் வரமுன் அவற்றுக்கு அப்பால் முதலில் கோட்பாடுகள் வர வேண்டும். அவையே பின்னர் அரசியலமைப்பில் இடம்பெறும்.

இப்போது போராட்டக்காரர்கள் மத்தியில், தமிழர்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில், கோட்பாடுகளை நாம் காணவில்லை. எமக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு போராட்டக்கார அமைப்புகளின் ஆவணங்களில் ஒருசில மென்மையான கோஷங்களைத்தான் நாம் காண்கிறோம்.

ஆகவே தமிழர் அபிலாஷைகளையும் கோஷங்களாக மட்டும் இல்லாமல், கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிச கட்சி ஆகிய அமைப்புகள் ஆவன செய்ய வேண்டும்.

போராட்ட குழுக்களிடம் தமிழர் தேசிய அபிலாஷைகளை காணவில்லை - மனோ கணேசன்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version