சீனாவின் ஆய்வு கப்பல் யுவான் வொங் 05 இனை இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தை பிற்போடுமாறு இலங்கை சீன அரசிடம், இலங்கை தூதரகம் மூலம் கோரியிருந்தது.
இந்த நிலையில் இலங்கையின் உயர் அதிகாரிகளை அவசர கூட்டத்துக்கு கொழும்பிலுள்ள சீன தூதரகம் அழைத்துள்ளது.
இந்த மாதம் 11 ஆம் திகதி இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் ஆய்வு கப்பல் வருகை தரவிருந்தது. இந்தியா அரசாங்கம் இந்த கப்பலின் வரவுக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம், சீனாவிடம் இந்த கப்பலை தற்போது அனுப்பி வைக்க வேண்டாமென 05 ஆம் திகதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான சீன தூதுவரிடம் இது தொடர்பில் தனியாக பேசியதாக ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும் ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை மறுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி யுவன் வொங் 05 இலங்கைக்கு வருவதற்கான அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியது. இந்த ஆய்வு கப்பலானது எரிபொருள் மீள் நிரப்புகைக்கவும், ஏனைய தேவைகளை மீள் நிரப்புகை செய்வதற்காகவுமே வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது இந்து சமுத்திரத்தின் வடமேல் பகுதியில் செய்மதி கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
