சந்தர்ப்பவாத அரசியலினால் நாட்டை மீட்டெடுக்க முடியாது – சஜித்

2019 இல், வெற்றி வீரத்தைப் பற்றி சிந்தித்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததாகவும், இரண்டு வருடங்களின் பின்னர் ஊட்டச்சத்து குறைபாடு நிறைந்த நாடு உருவாகியதே மிச்சம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கான பொதியொன்றைக் கூட வழங்க முடியாத அளவுக்கு வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டில், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு யாரால் மனது வைக்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வொன்று நேற்று (14.08) கொலன்ன துங்கம தெருன்னான்சேகம விகாரையில் இடம் பெற்றது.

ஆரோக்கியமான குழந்தைகள் மற்றும் தாய்மார்களை பெற்றெடுப்பது கூட தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானது என இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இத்தருணத்தில் அமைச்சுப் பதவிகளை எடுப்பதை விடுத்து நாட்டை வீழ்ந்துள்ள படுபாதாள நிலையில் இருந்து மீட்பதற்கு உண்மையான அர்ப்பணிப்பையே மேற்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சந்தர்ப்பவாத பதவிகளைக் கொண்டு அதனைச் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version