ஆஸி 25 மில்லியன் டொலர் மேலதிக உதவி

இலங்கையின் அவசர உணவு தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் 50 மில்லியன் டொலர்களை நன்கொடையாக இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளுக்கு வழங்கியுள்ள நிலையிலேயே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவுகள் காரணமாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதாகவும், அவ்வாறு 5 கப்பல்களில் வருகை தந்த 137 பேர் அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய ஊடகம், மேலும் 15 படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தர முயற்சித்த 701 நபர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உதவியானது இலங்கையின் பொருளாதரத்தை மேம்படுத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தேசிய கொள்கை எனவும், அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை மக்களோடு எப்போதும் நிற்குமெனவும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆய்வு கப்பலான யுவன் வோங் 05 இலங்கை சென்றதன் மூலம், சீனா தனது பலத்தை இலங்கையில் காட்ட முயல்கின்றது என்ற அடிப்படையிலும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version