பெரும் போகத்திற்கான உரம் கிடைக்குமென ஜனாதிபதி உறுதி

வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி வண. பல்லேகம சிறினிவாச தேரருடன் இன்று (20.08) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு ஆசி பெற்றதோடு, வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி அதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறினிவாச தேரரை சந்தித்து நலம் விசாரித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அங்கு, மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதாரத்தை மீட்பதற்கு முக்கிய காரணியாக விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

“தேயிலை, இரப்பர், தென்னை போன்ற பயிர்களுக்கு உரம் வழங்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், சோளப் பயிர்ச்செய்கையை ஊக்கப்படுத்தினால், கோழிப்பண்ணை கைத்தொழிலை தொடர முடியும். சோளத்திற்கான விதை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என இந்த சந்திப்பில் ஜனாதிபதி ரணில் கூறினார்.

தமது பிரதேசங்களில் விவசாயத்திற்கு தேவையான உரம் , எரிபொருள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறியும் பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதோடு, மத வழிபாட்டுத்தளங்களின் மேம்பாடு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் பிரகாரம், மகா விகாரையின் அகழ்வுப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் மூலம் மியான்மார், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலிருந்து பெருமளவிலான மக்களை இந்நாட்டிற்கு எம்மால் அழைத்து வர முடியும்” என்றார்.

முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான எஸ்.எம். சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே. , எஸ்.டி. சேமசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version