முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு திரும்பலாம் என்ற தகவல் ஆரம்பத்தில் வெளியாகியிருந்த போதும் அவர் இன்று நாடு திரும்பவில்லை.
அவர் நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் தேவைப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நாட்டுக்கு திடும்புவது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் படியே தாமதமாகிறது எனவும், அவருக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் நாடு திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று தமக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மேலும் தகவல் வெளியிடடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்புவது தொடர்பாகவும், அவரின் பாதுக்காப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஜூலை மாதம் 09 ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையினை விட்டு வெளியேறி, பின்னர் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுகள் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் தாய்லாந்து சென்று அங்கே பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதியினை விட்டு வெளியேற முடியாத நிலையில் தங்கியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் அதிகமான செலவினங்கள் காரணமாக விரைவாக நாடு திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனி விமானம், விடுதி கட்டணங்கள், பாதுகாப்பு என செலவினங்கள் அதிகமாக காணப்படுவதனால் கோட்டாபய ராஜபக்ஷ விரைவாக நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.