நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக மன்னிப்பு கோரினார் ரஞ்சன் ராமநாயக்க.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து, நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் , 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதுவரை, ராமநாயக்கவின் தண்டனைக் காலம் ஒரு வருடமும் 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.

அலரிமாளிகைக்கு வெளியில் தாம் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது, இழிவானது மட்டுமன்றி ஒட்டுமொத்த நீதித்துறையையும் அவமதிக்கும் வகையிலானது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், அது தொடர்பில் முழு நீதித்துறையிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2017 ஆகஸ்ட் 21ஆம் திகதி தாம் வெளியிட்ட கருத்தை, மீளப் பெறப் போவதில்லை எனக் கூறி, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே கூறிய கருத்திற்கும் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அத்துடன், தனது வாழ்நாளில், ஒட்டுமொத்த நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் அல்லது இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு கருத்தையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் சத்தியக் கடதாசியில் உறுதியளித்துள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் அண்மையில் கையெழுத்திட்டிருந்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version