இலங்கையின் வாழ்வா சாவா போட்டி!

-டுபாயிலிருந்து விமல்-

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முக்கியத்துவம் வாய்ந்த போட்டி இன்று(01.09) ஐக்கிய அரபு இராட்சியம் டுபாய் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை மற்றும் பங்காளதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஒப்பான போட்டியாக நடைபெறவுள்ளது. வெற்றி பெறுமணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் அதேவேளை, தோல்வியடையும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும்.

அடுத்த சுற்று வாய்ப்புக்காக இரண்டு அணிகளுமே போராடும். அடுத்த சுற்றுக்கு சென்றால் மேலும் மூன்று போட்டிகள் காணப்படுகின்றன. அவற்றின் பின்னர் ஒரு போட்டி மாத்திரமே. அது இறுதி போட்டி.

இரு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகள் என்றே கருதலாம். இலங்கையிலும் பார்க்க பங்காளதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அதிக அனுபவம் கொண்டவர்கள். ஆனாலும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் திறமையானவர்கள்.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களது நுட்பம் போட்டிகளை எடுத்து செல்லும் பாங்கு என்பன இல்லாமையே தோல்விகளுக்கு முக்கிய காரணம். இதனை பயிற்றுவிப்பாளர் சீர் செய்ய வேண்டும்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை சரியாக எதிர்கொண்டு நிதானம் கலந்த அதிரடியோடு துடுப்பாடினால் இலங்கை அணி வெற்றி பெறும் நிலைக்கு செல்ல முடியும்.

பங்காளதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சு இலங்கை அணியிடம் உண்டு. அதனை சரியாக பாவிக்க வேண்டும். தனஞ்சய டி சில்வா அணிக்குள் வருவதன் மூலம் அணிக்கான சமநிலையினை வழங்க முடியும். இன்றைய ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக அமையுமென கூறப்படுகிறது. அவ்வாறான சூழ்நிலையில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் பலம். தனஞ்சயவின் துடுப்பாட்டம் மத்திய வரிசையில் இலங்கை அணிக்கு தேவையான ஒன்று.

பங்களாதேஷ் அணி இன்று கடும் சவாலை இலங்கை அணிக்கு வழங்கும் என எதிர்பார்க்கலாம். 12 போட்டிகளில் 8 போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியினை வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நம்பிக்கையோடு விளையாடினாள் இலங்கை அணி வெற்றி பெறலாம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version