-டுபாயிலிருந்து விமல்-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி இன்று டுபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டி மேலும் விறுவிறுப்பை தருமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்பது எப்போதுமே கடுமையாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய போட்டியும் மிகவும் விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக காணப்படுகிறது.
இந்தியா அணி பலமான அணியாக இந்த தொடரில் களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியுடனான முதற் போட்டியிலும் வெற்றி பெற்றது. இன்றும் அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகிறது.
முழுமையான பலமாக இரு அணிகளும் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளன. ரவீந்தர் ஜடேஜா உலக கிண்ண 20-20 தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழங்கால் உபாதை காரணமாக அணியினை விட்டு அவர் விலகியுள்ளார். அவேஷ் கானுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையினால் அவர் விளையாடும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
வாநிலை மாற்றம் ஏற்படும் காலமென்பதனால், காய்ச்சல், தடிமன் போன்றவை ஏற்படும் காலமிது என டுபாயில் உள்ளவர்கள் கூறுகின்றனர். எனக்கும் கூட தடிமன் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சில் மேலுமொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஷஹன்வாஸ் தானி உபாதையடைந்துள்ள நிலையில் இன்று விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக ஹசன் அலி விளையாடும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
இன்றும் டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிறையவுள்ளது. டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்றின் போட்டி என்பதால் மேலதிக விறு விறுப்பு இன்றைய போட்டியில் ஏற்படுமெனவும் நம்பப்படுகிறது.
இன்றைய நாள் கடுமையான வெயில் உள்ள நாளாக காணப்படுகிறது. 40 பாகை செல்சியஸ் ஆக பகல் 1 மணிக்கு வெப்பம் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தினுள் இது அதிகம். போட்டி ஆரம்பிக்கும் வேளையில் 33 பாகையாகவும் காணப்படுகிறது.
டுபாயில் கடந்த போட்டிகளில் பாவிக்கப்பட்ட ஆடுகளேமே இன்றும் பாவிக்கப்படவுள்ளது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாகவே இது காணப்படும். ஓட்டங்கள் இன்றும் அதிகமாக குவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.