ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசியமானவர்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு பயணம் செய்ததாக ஜனாதிபதி செயலக பேச்சளார் ஒருவர் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எலிசபத் மகாராணியின் இறுதிக் கிரிஜைகளில் பங்குபற்ற ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் மகாராணியின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற அதேவேளை, பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் புதிய சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம, இந்த சுற்றுப் பயணத்தில் தேவைக்கு அதிகமானவர்கள் பயணமாகியுள்ளதாகவும், நாடு இக்கட்டான சூழ்நிலையில் காணப்படும் போது இவ்வாறு அதிகமானவர்கள் ஏன் பயணம் செய்ய வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய வெல்கம, மஹிந்த ராஜபக்ஷ – ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரே வெளிநாடு செல்லும் போது இவ்வாறு அதிகமானவர்களை அழைத்து செல்வார்கள் எனவும் சுட்டிக் காட்டினார்.
இந்த குற்றச் சாட்டுக்கே ஜனாதிபதி செயலக பேச்சாளர் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி, முதற் பெண்மணி பேராசிரியர் மைத்திரேயி விக்ரமசிங்க, மூன்று பாதுகாவலர்கள் மற்றும் ஜனாதிபதி செயலக வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பாளர் ஆகியோரே பயணித்துள்ளதாகவும், வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பாளர் ஜனாதிபாதியின் சந்திப்புகள், ஊடக விடயங்களை கையாள்வதற்க்காக சென்றுள்ளதாகவும் குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.