ரஸ்சியா இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்கள்(தமிழர்)

ரஸ்சியா, யுக்ரைன் போரினுள் அகப்பட்டு ரஸ்சியா இரானுவத்தினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையகர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டு யுக்ரைனில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் வேலை தேடி சென்றவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் என அறியப்பட்டுள்ளது.

மூன்று மாதத்துக்கும் அதிகமான காலம் மிகவும் கொடுமையாக இந்த ஏழு பேரும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலையானவர்கள் தற்போது யுக்ரைனில் சகல வசதிகளும் உள்ளடங்கிய புனர்வாழ்வு முகாமில் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தாம் எவ்வாறு கொடுமை படுத்தப்போட்டோம் எனபதனை வெளியிட்டுள்ளனர். தாம் மீள திரும்ப மாட்டோம் என நினைத்திருந்ததாக விடுதலையான மாணவர்களில் ஒருவரான டிலுஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் தலைநகர் கார்க்கிவ் இலிருந்து 120 KM தூரத்தில் அவர்கள் தங்கியிருந்த குப்பினஸ்க் என்ற இடத்திலிருந்து கார்க்கிவ் நோக்கி நடைபயணமாக சென்றவர்கள், ரஸ்சிய எல்லைக்கு அண்மையில் வைத்து முதலாவது சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் ஒரு இரும்பு உற்பத்தி தொழிற்சாலைக்குள் அடைக்கப்பட்டனர்.

அன்றிலிருந்து அவர்கள் அடிமைகள் போலவும் துன்புறுத்தப்பட்டுமுள்ளனர். மிக சிறியளவிலான உணவே வழங்கப்பட்டுள்ளன. மலசல கூட தேவைகளுக்காக ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் 2 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த நேரப்பகுதியினுள் அவர்கள் குளிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த குழுவிலிருந்த பெண் ஒருவர் தனி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், குளிக்கும் வேளையில் தான் தாக்கப்பட்டதாகவும், தனக்கு மன நோயுள்ளதாகவும் அதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் ஆனால் தான் அவற்றை பாவிக்கவில்லை எனவும் 50 வயதான மேரி எடிட் உதயகுமார் எனும் பெண் கூறியுள்ளார். அத்தோடு மற்றவர்களை தான் சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

“நாம் கோவத்தோடும், குடும்பத்தின் நினைவுகளோடும் மட்டுமே இந்த நாட்களை கடந்ததாகவும், கடவுளின் பிரார்த்தனைகளே தம்மை காப்பாற்றியதாகவும்” டிலுக்ஸன் எனும் 25 வயது இளைஞர் ஒருவர் தமது அனுபவத்தை கூறியுள்ளார்.

இரு இளைஞர்களது கால் நகங்கள் இழுத்து பிடுங்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் அதனை பி.பி.சி க்கு காட்டியுள்ளார். அத்தோடு ரஸ்சியா இராணுவ சிப்பாய்கள் மது போதையில் குறித்த ஆண் குழுவினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

“வயிற்றில் குத்தியதன் காரணமாக இரண்டு நாட்கள் கடுமையான வயிற்று வலியோடு தான் அவதிப்பட்டதாகவும், தன்னை கொடுமைப்படுத்தியதோடு பணம் கேட்டதாகவும் கூறியுள்ள 35 வயதான டிலுக்ஸன் எனும் ஆண் கூறியுள்ளார்.

இந்த குழுவினர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர். தொலைபேசிகள் எதுவுமற்ற நிலையில், இந்த குழுவினர் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், யுக்ரைன் பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களை சந்தித்து பின்னர் குடும்ப உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசியதாகவும் பி.பி.சி மேலும் தெரிவித்துள்ளது.

ரஸ்சியா, தாம் பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்துகளையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version