இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சாதனை வெற்றி

இந்தியா மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரையும் 3-0 என வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மகளிர் அணி இங்கிலாந்தில் இரண்டாவது தடவை தொடர் ஒன்றினை வெற்றி பெற்றுள்ள அதேவேளை, முதற் தடவையாக சகல போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவினதும், மகளிர் கிரிக்கெட்டினதும் முக்கியமான அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஜுஹலான் கோஸ்வாமி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது 39 ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக இவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அணிக்காக விளையாடியுள்ளார். ஓய்வு பெற்ற இந்தியா அணியின்தலைவி மித்தாலி ராஜுக்கு(232) அடுத்தபடியாக கூடுதலான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர் ஜுஹலான் கோஸ்வாமி. 204 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். கூடுதலான விக்கெட்களை(255) கைப்பற்றியுள்ள அதேவேளை, 250 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீராங்கனை ஆவார். 10,000 பந்துகளை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசிய ஒரே பந்துவீச்சாளர்.

நேற்றைய போட்டியில் 2 விக்கெட்களை அவர் கைப்பற்றினார். இந்தியா அணி சாதனை தொடர் வெற்றியுடன் அவருக்கு பிரியாவிடை வழங்கியுள்ளது.

மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது. இதில் தீப்தி ஷர்மா ஆட்டமிழக்காமல் 68(106) ஓட்டங்களையும், ஸ்ம்ரிதி மந்தனா 50(79) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கேட் க்ரோஸ் 4 விக்கெட்களையும், பிரேயா கெம்ப், சோபி எக்லெஸ்டொன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றது. இதில் சார்லி டீன் 47(80) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரேணுகா சிங் 4 விக்கெட்களையும், ஜூலன் கௌஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் தல இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாயகியாக ரேணுகா சிங் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரின் நாயகியாக ஹர்மன்ப்ரீட் கவுர் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version