IMF கடன் இலங்கைக்கு எப்போது, எவ்வாறு கிடைக்கும்?

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பணம் இலங்கைக்கு இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் கிடைத்துவிடுமென நம்பிக்கையாக உள்ளதாகவும், ஆனால் அறிக்கையின் பிரகாரம் அதற்கான வாய்ப்புகள் உறுதியாக கூற முடியாத நிலையில் காணப்படுவதாகவும் ஜப்பான் ஊடகமான நிக்கி ஆசியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு டிசம்பருக்குள் கிடைக்குமென இலங்கை அதிகமாக நம்பிக்கையாக காணப்படுவதகவும், ஆனால் பெரும் கடன்களை வழங்கிய மற்றைய நாடுகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது எனவும் மேலும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்த கடன் தொடர்பான கால வரையறையினை நிர்ணயிப்பது கடினம். கடன் நிவாரண திட்ட நடவடிக்கைகள் தொடர்பான காலமானது சரியாக வரையறுக்க முடியாது. இந்த திட்டத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் விரைவாக திட்டங்களை முன்னெடுத்தால் இலங்கையின் சிக்கல் நிலைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைமையதிகாரிகள் பீட்டர் பிரேயுர் மற்றும் மஷாஹிரோ நொஷாகி ஆகியோர் நிக்கீ ஏசியாவுக்கு தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அலுவலர்கள் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த வருட ஆரம்ப பகுதியில் கடன்களை மீள செலுத்த முடியாது எனவும், கடன்களை மீள ஒழுங்கமைப்பு செய்தால் மட்டுமே மீள செலுத்த முடியுமெனவும், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அறிவித்திருந்தார்.

இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சு கடன் மீளமைப்பு தொடர்பிலானா நிலைமைகள் தொடர்பிலும், சர்வதேச நாணய நிதிய நிலைவரங்கள் தொடர்பிலும் வெளிப்புற கடனாளிகளுக்கு இணைய வழி கலந்துரையாடல் மூலம் விளக்கமளிப்பு வழங்கியிருந்தது.

குறித்த கலந்துரையிடலில் சில பிழையான நாட்டின் கொள்கைகள், மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய கையிருப்பு வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு முன்னதாக பரிஸ் க்ளப் அங்கத்துவ மற்றும் அங்கத்துவமற்ற ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, உள்ளிட்ட 23 நாடுகளுடன் இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பேசசுவார்த்தை நடாத்தியதோடு சர்வதேச நாணய நிதியத்தினது சாதக சமிஞைக்யினை பெற ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்தியா உயர் ஸ்தானிகராலயம் அதற்கான சாதகமான கருத்தினை வெளியிட்டுள்ளதாகவும், நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு முன்னதாக தனது ஆதரவினை இந்தியா வழங்கியுள்ளதாகவும் மேலும் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்தோடு இந்த விடயங்கள் சாதகமான முறையில் நடைபெற்றதாக இந்தியா அரச சார் அதிகாரி ஒருவரின் தகவலை மையமாக கொண்டு இந்த தகவலை ஜப்பான் ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடன் வழங்குநர்களிடமிருந்து உத்தரவதை பெறுவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையினை பெறுவதற்கும் இலங்கை ஆதரவினை கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடன் மீள் திட்டமிடல் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தாம் முன்னெடுக்க தயாரென ஜப்பான் தூதரகம் ஆதரவினை தெரிவித்துள்ளது.

நிலைமைகள் இவ்வாறு இருக்க அனைவரது பார்வையும் இலங்கைக்கான 52 சதவீத கடன்களை வழங்கியுள்ள சீனாவின் பக்கமாகவே இருக்கிறது. சீனா கடன்களை மீள வழங்குவதற்கு, அல்லது கடன்களை ஒத்திவைப்பதற்கு அல்லது நட்டத்தினை ஏற்படுத்தும் மீள் ஒழுங்கமைத்தலுக்கு செல்லுமா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சீனா இலங்கையுடனான நட்புறவு தொடருமெனவும், இலங்கைக்கு ஆதரவாக செயற்படுமெனவும் நிக்கி ஏசியா ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம், கடன் மீளமைப்பு தொடர்பில் சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தகவல் வழங்கியுள்ளதாகவும், ஆனால் எப்போது அது முடிவுக்கு வருமெனவும் கூற முடியாதென மேலும் அந்த முக்கியஸ்த்தர் கூறியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version