சுமந்திரனை கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்ததுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதிகள் சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் சந்தேகநபர்கள் நால்வர் சார்பிலும் பிணை விண்ணப்பம் செய்தார். தொடர்ந்து அரச சட்டவாதி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன சந்தேக நபர்கள் நால்வருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணையினை வழங்கினார்.

பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த ஐந்தரை வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version