காற்பந்து உலக கிண்ண தொடரின் போர்த்துக்கல் மற்றும் கானா ஆகிய அணிகளுக்கிடையிலான குழு H போட்டி மிகவும் விறுப்பானதாக அமைந்தது. போட்டி ஆரம்பித்தது முதல் இரு அணிகளும் கடுமையாக போராடின. 24 நிமிடங்களில் 5 கோல்கள் இந்தப் போட்டியில் பெறப்பட்டன.
65 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த பனால்ட்டியினை கோலாக மாற்றினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 8 நிமிடங்களில் கானா அணியின் தலைவர் அன்றே அயே தனது அணிக்கான கோலை அடித்து போட்டியை சமன் செய்தார். கோல் அடித்து சில நிமிடங்களில் அவர் மாற்றப்பட 78 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் அணி இரண்டாவது கோலை பெற்றது. ஜோ பெலிக்ஸ் கோலை அடித்து 2 நிமிடம் 40 செக்கனில் ரபேல் லயோ போர்த்துக்கல் அணியின் மூன்றாவது கோலை அடித்தார். போர்த்துக்கல் அணி வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில் ரொனால்டோ உட்பட மூன்று வீரர்கள் ஒரே வேளையில் மாற்றப்பட்டனர். 9 நிடங்களில் 89 ஆவது நிமிடத்தில் கானா அணிக்காக ஒஸ்மான் புகாரி இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார். இதன் பின்னர் போட்டி மேலும் உச்சபட்ச விறுப்புக்கு சென்றது.
கானா அணி இறுதி வரை மேலுமொரு கோலை போட போராடியது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. போர்த்துக்கல் அணியும் கோல்களுக்காக போராடியது. போட்டி நிறைவடைய சில செக்கன்கள் மட்டுமே மீதமிருந்த வேளையில் கோல் வாய்ப்பொன்று கானா அணிக்கு மயிரிழையில் தவறவிடப்பட்டது.
இறுதியில் 3 -2 என்ற கோல் அடிப்படையில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது.