கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரின் குழு D போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதலிடத்தை பெற்ற பிரான்ஸ் மற்றும் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.
பிரான்ஸ் அணி இன்று தன்னுடைய 9 வீரர்களுக்கு போட்டியின் ஆரம்பத்தில் ஓய்வு வழங்கி இரண்டாம் தர அணியுடன் களமிறங்கியது. அதனை வாய்ப்பாக எடுத்த டுனீசியா அணி ஒரு கோலை அடித்து வெற்றி பெற்றுக்கொண்டது. இது அவர்களின் மூன்றாவது உலக கிண்ண வெற்றியாகும். 1978 ஆம் ஆண்டு முதல் வெற்றியினை பெற்றுக்கொண்டவர்கள், கடந்த உலக கிண்ணத்தில் ஒரு வெற்றியினை பெற்றுக்கொண்டது. பிரான்ஸ் அணியினை வெற்றி பெற்ற போதும் அவர்களினால் அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியவில்லை.
டுனீசியா அணி சார்பாக வாஹ்பி கஷாரி 58 ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார். அதன் பின்னர் பிரான்ஸ் அணி தனது முன்னணி வீரர்கள் ஐவரை களமிறக்கியது. இருப்பினும் பிரான்ஸ் அணி வெற்றியினை பெற முடியவில்லை.
பிரான்ஸ் அணியின் இந்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும், மற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பினை பெற்றமையினால் அது பெரிதாக பார்க்கப்படவில்லை. இல்லாவிட்டால் அது பாரிய துரோகமாக அமைந்திருக்கும்.
அவுஸ்திரேலியா, டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மத்தியு லெக்கி அடித்த கோல் மூலமாக அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுமணி அடுத்த சுற்று வாய்ப்பை பெறும் என்ற நிலையில் அவுஸ்திரேலியா அணி வெற்றியினை பெற்றுக் கொண்டது.
இரு அணிகளும் மிகவும் கடுமையாக மோதிக்கொண்டன. அவுஸ்திரேலியா அணி இரண்டாவது தடவையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதற் தடவையாக அவுஸ்திரேலியா அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியிருந்தது.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | பிரான்ஸ் | 03 | 02 | 01 | 00 | 06 | 03 | 06 | 03 |
| 2 | அவுஸ்திரேலியா | 03 | 02 | 00 | 00 | 06 | -01 | 03 | 04 |
| 3 | டுனீசியா | 03 | 01 | 01 | 01 | 04 | 00 | 02 | 02 |
| 4 | டென்மார்க் | 03 | 00 | 02 | 01 | 01 | -02 | 01 | 03 |
