கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண தொடரில் ஜப்பான் அணி மிக அபாரமாக விளையாடி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. குழு F இல் முதலிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. பலமான அணிகளான ஸ்பெய்ன், ஜேர்மனி அணிகளை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. ஜப்பான் அணி இந்த அணிகளை உலக கிண்ண தொடரில் வெற்றி பெறுவது இதுவே முதற் தடவையாகவும்.
உலக கிண்ணத்தின் ஜாம்பவான்களான ஜேர்மனி அணி இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக முதலாம் சுற்றோடு வெளியேற்றப்பட்டுள்ளது. 1938 ஆம் ஆண்டு முதற் தடவை முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டவர்கள் 2018 ஆம் ஆண்டு அதன் பின்னர் முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டார்கள்.
குழு F இற்கான போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக அமைந்தது. இரு போட்டிகளது கோல் நிலவரங்களும் மாற மாற அணிகள் தெரிவு செய்யப்படும் நிலையும் மாறியது. இரண்டாம் பாதியில் முடிவுகள் முழுமையாக மாறிப்போனது.
ஜேர்மனி மற்றும் கொஸ்டரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் பத்தாவது நிமிடத்தில் ஜேர்மனி அணி சார்பாக சேர்ஜ் ஞப்ரி அடித்த கோலின் மூலமாக நீண்ட நேரம் ஜேர்மனி அணி முன்னிலை பெற்றது. 53 ஆவது நிமிடத்தில் கொஸ்டரிக்கா அணி சார்பாக ஜெல்ட்ஸின் ரெஜெடா கோலடித்து போட்டியினை சமன் செய்தார். 70 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்த ஜுவான் வக்ராஸ் அடிக்க கொஸ்டரிக்கா அணி முன்னிலை பெற்றது. ஆனால் அது நீடிக்கவில்லை. 3 நிமிடங்களில் ஜேர்மனி அணியின் காய் ஹவேர்ட்ஸ் கோலடித்து போட்டியினை சமன் செய்தார். 85 ஆவது நிமிடத்தில் காய் ஹவேர்ட்ஸ் கோலடித்து மீண்டும் முன்னிலையினை பெற்றுக்கொடுக்க 89 ஆவது நிமிடத்தில் நிக்லஸ் புவல்க்ரக் நான்காவது கோலினை அடித்தார்.
ஸ்பெய்ன் அணி ஜப்பான் அணியினை இலகுவாக வெற்றி பெற ஜேர்மனி அணி கொஸ்டரிக்கா அணியை வெற்றி பெற்று இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற எதிர்பார்ப்பே காணப்பட்டது. ஆனால் ஜப்பான் தலை எழுத்தை தலைகீழாக மாற்றி முதலிடத்தை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. 1998 ஆம் ஆண்டு முதல் ஒன்று விட்ட ஓரு முறையாக இரண்டாம் சுற்றுக்கு தெரிவான ஜப்பான் அணி முதற் தடவையாக அடுத்தடுத்த இரண்டு தடவைகளில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
ஆரம்பம் முதலே விறு விறுப்பாக சென்ற இந்த போட்டியில், 11 ஆவது நிமிடத்தில் அல்வாரோ மோர்ட்டா கோலடித்து ஸ்பெய்னுக்கு முன்னிலையினை வழங்கினார். போராடிய ஜப்பான் அணி 48 ஆவது நிமிடத்தில் ரிட்சு டோன் அடித்த கோல் மூலமாக சமநிலை பெற்றது. 3 நிமிடங்களில் ஓ டனாக்கா அடித்த கோல் மூலமாக ஜப்பான் அணி முன்னிலை பெற்றது. ஜப்பான் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாக சமநிலை போதுமென்ற நிலையில் வெற்றியினை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானார்கள்.
இந்த முடிவுகளின் படி ஜப்பான் அணி குரேஷியா அணியினையும், ஸ்பெய்ன் அணி மொரோக்கோ அணியினையும் முன்னோடி காலிறுதி போட்டிகளில் சந்திக்கவுள்ளன.
அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
1 | ஜப்பான் | 03 | 02 | 01 | 00 | 06 | 01 | 04 | 03 |
2 | ஸ்பெய்ன் | 03 | 01 | 01 | 01 | 04 | 06 | 09 | 03 |
3 | ஜேர்மனி | 03 | 01 | 01 | 01 | 04 | 01 | 06 | 05 |
4 | கொஸ்டரிக்கா | 03 | 01 | 00 | 02 | 03 | -08 | 03 | 11 |