மொணராகலையில் பயிர்ச் செய்கைக்காக வன காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மொணராகலை, கொட்டியாகலை, கெபிலித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளை மீள் வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை, பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் இந்தக் காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (01.12) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மொணராகலை, கொட்டியாகலை, கெபிலித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான சுமார் 8000 ஹெக்டெயர் காணி, காடுகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காடு வளர்ப்பதற்காக மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ள, 3000 ஹெக்டெயர் பரப்பளவில், காடு வளர்ப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எஞ்சியுள்ள 5000 ஹெக்டெயர் காணிகளில், காடுகளை வளர்ப்பதற்கு தேவையான வசதிகள் தயார் செய்யும் வரை விவசாயிகளுக்கு தற்காலிகமாக பயிர்ச்செய்கைக்கு பகிர்ந்தளிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கால்நடை வளர்ப்பிற்காக குறிப்பிட்ட அளவு காணியை தற்காலிகமாக விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

காணிகளை பயிர்ச் செய்கைக்கு பகிர்ந்தளிக்கும் போது ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கினார். அத்துடன், இந்தப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சி.எம். ஹேரத் உட்பட துறைசார் நிறுவனத் தலைவர்கள், அதிகாரிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply