IMF நடைமுறை தொடர்பில் தலைமையதிகாரி கவலை வெளியிடடார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான G20 பொதுவான கட்டமைப்பில் திருத்தங்களை விரைவுபடுத்துவதும் இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கான செயல்முறையைத் திறந்து விடுவதும் அவசியமென சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையதிகாரி க்ரிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற ரொய்ட்டர்ஸ் மாநாட்டில் இந்த கருத்தினை அவர் முன் வைத்துள்ளார்.

ஒரு நாடு கடன் மறுசீரமைப்பு கோரிக்கை முன் வைத்தால் அதனை வேகப்படுத்தும் வகையிலும், உடனடி நிவாரணம் வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை போன்ற நடுத்தர வருமானம் உடைய நாடுகளுக்கு உடனடி திட்டங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடன் அளவு மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் கடன் தீர்வு மீதான நம்பிக்கை இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக தாங்கள் கவலைப்படுவதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அமைப்பு ரீதியான கடன் நெருக்கடி இருப்பதாக தாம் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ள அவர் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகள் நிதி ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் நெருக்கடியைத் தூண்டும் அளவுக்கு பெரியதாக இல்லை எனவும் மேலும் கூறியுள்ளார்.

உலகத்தின் வறுமையான நாடுகளின் கடன் தொகை வருடாந்தம் 62 பில்லியன் டொலர்களாக கடன் பெறுனர்களிடமிருந்து காணப்படுவதாக உலக வங்கி தலைவர் டேவிட் மல்பஸ் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இது 35% அதிகரிப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கடன்களில் 2/3 பகுதி சீனாவிடம் காணப்படுவதாகவும், அடுத்த வாரமளவில் வருடாந்த கடன் புள்ளி விபரங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் சீனாவினால் வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

சீனாவிடம் கடன் பெற்ற வறிய நாடுகளுக்கான, நிவாரண திட்டங்கள் தொடர்பிலான கூட்டத்தில் சீனாவுடன் தானும் இணையவுள்ளதாக உலக வங்கி தலைவர் நடைபெற் மாநாட்டில் கூறியுள்ளார். சீனா அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில், மற்றைய நாடுகளது நிலை தொடர்பில் சிந்தித்து செயற்படவேண்டியது அவர்களது பொறுப்பென மேலும் உலக வங்கி தலைவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply