இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கும் இடையில் 2023 ஜனவரி நடுப்பகுதியில் படகு சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதுடன், இச்சேவைக்கு இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
“யாழ்ப்பாண தீபகற்பத்தில் ஏராளமான இந்திய குடிமக்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர், இத்தகைய செயற்பாடுகள் வெளிநாட்டு வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது இந்தியாவுக்கு செல்லும் பௌத்த யாத்ரீகர்களுக்கும் மிகப்பெரிய வசதியாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது, பயணிகள் சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு துறைமுகங்களில் தற்போதுள்ள வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டுமென படகு உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை துறைமுகங்களில் சுங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அரசாங்க நடைமுறைகளுக்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையின் கீழ் உள்ள படகுகளில் ஒரு பயணத்தில் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் மேலும் பயணத்தில் ஒரு பயணிக்கு 60 டொலர்கள் (சுமார் 21,000 ரூபாய்) அரவிடப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு பயணியும் 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் படகு உரிமையாளர்கள் தெரிவிதுள்ளனர்.