சந்தையில் ஒரு முட்டையை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யும் நடமாடும் சேவையை ஆரம்பிக்க கோழிப்பண்ணை கைத்தொழில் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இம்மாத இறுதி முதல் முட்டை 55 ரூபாய்க்கு வழங்க இந்த சங்கத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு நாளும் 20 டிரக் முட்டைகளை கொழும்புக்கு அனுப்பவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் விற்பனை செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், படிப்படியாக ஏனைய நகர்ப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விலையில் முட்டை விற்பதற்கு, இடைத்தரகர்கள், அல்லது வேறு எந்த தரப்பினரும் அழுத்தம் கொடுத்தால், அதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ளுரில் ஒரு முட்டை 60-70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் முட்டை வழங்குவது தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் நியாயமான விலையில் முட்டையை வழங்காவிட்டால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் முட்டையை வழங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் விவசாயத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போதும் 49 மற்றும் 55 ரூபாய்க்கு முட்டை வழங்கப்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இடைத்தரகர்கள் சிலர் முட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முட்டை விலையை உயர்த்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
