பம்பலப்பிட்டி, பௌத்தலோக மாவத்தையில் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றில் தொங்கவிடப்பட்டிருந்த கைக்குண்டு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்புரவு பணியாளரான குறித்த சந்தேக நபர், மொரந்துடுவ பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கைக்குண்டொன்றை பொலித்தீன் பையில் வைத்து பம்பலப்பிட்டி, பௌத்தலோக மாவத்தையில் வீதியில் உள்ள 154 இலக்க பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இருந்த மரமொன்றில் தொங்கவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், குறித்த சந்தேகநபரே மரமொன்றில் வெடிகுண்டு தொங்கவிடப்பட்டிருப்பதை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரே இந்த செயலை செய்தது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, மொரந்துடுவ, பிரதேசத்தில் இருந்து தான் பணிக்கு வரும்போது, வீதிக்கு அருகில் இரும்பு பந்து போன்ற ஒன்றைக் கண்டதாகவும், அதனை பழைய இரும்பிற்கு விற்பனை செய்வதற்கு கொண்டு வந்த பின்னர், மற்றுமொரு துப்புரவு பணியாளர் இதை கைக்குண்டு என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் பின்னர் அதனை அங்கிருந்த மரத்தில் தொங்கவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
65 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும், விசாரணையின்போது தகவல்கள் எதுவும் சரியாக கிடைக்கப்பெற்றாவிடில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பத்மலாலின் பணிப்புரையின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
