‘கெத்து பசங்க’ குழுவில் அறுவர் கைது!

‘கெத்து பசங்க’ என்ற வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக வவுனியா பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஏந்திய குழுவொன்றின் அங்கத்தவர்கள் 6 பேர் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டு வாள்கள்,வீல் வடிவில் செய்யப்பட்ட கூரிய ஆயுதம் மற்றும் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா சிறப்பு அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி வவுனியா பூவரசன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரின் கையடக்க தொலைபேசி பரிசோதனை செய்யப்பட்டபோது பல்வேறு அளவுகளில் பல வாள்களின் புகைப்படங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணையின் போது, கிடைத்த தகவல்களுக்கு அமைய ​​குறித்த நபருடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த காலங்களில் பூவரசங்குளம், தட்டங்குளம் மற்றும் செட்டிக்குளம் பகுதிகளில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் ‘கெத்து பசங்க’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயது நிரம்பியவர்கள் எனவும், இவர்கள் தற்போது பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கெத்து பசங்க’ வலையமைப்பினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

‘கெத்து பசங்க’ குழுவில் அறுவர் கைது!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version