வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெற்று உறுதி செய்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 1989 என்ற துரித அழைப்பு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணிநேர தகவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு டுபாயில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி 450,000 ரூபா பெற்றுக்கொண்டு, வேலை வாய்ப்பினை பெற்றுத்தரவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போலி முகவர் நிலையத்தில் பணியாற்றிகொன்டிருந்த இரண்டு இளம் பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விடயம் அறிந்த வேலைவாய்ப்பு நிறுவன உரிமையார் மற்றும் முகாமையாளர் இருவரும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வந்து சரணடைந்ததுடன், அவர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து பெறப்பட்ட 450,000 ரூபா பணத்தை இரண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்துமாறு உரிமையாளர் மற்றும் முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குவைத் நாட்டில் உள்ள பண்ணை ஒன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களை சேர்ந்த 06 இலங்கை இளைஞர்கள் இன்று (09.01) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சட்டவிரோத தரகர் ஒருவரின் ஊடாக குவைத் நாட்டிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
