காதலை முறித்துக்கொண்டு வேறு ஒருவரை காதலித்து விடுவாரோ என அச்சம் கொண்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி ஒருவர் நேற்று கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் சக மாணவனால் படுகொலை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
23 வயதான மாணவியின், காதலன் என நம்பப்படும் 24 வயதுடைய சந்தேக நபர், வெல்லம்பிட்டியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் தகராறு காரணமாகவே கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட யுவதி இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது காதல் உறவை முறித்துக் கொள்ளுமாறு தனது காதலனிடம் கூறியதாகவும், தனக்குப் பதிலாக யாரையாவது காதலித்துவிடுவாளோ என்ற அச்சத்தில் சந்தேக நபர் இந்தக் கொலையை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடல் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் முடிந்ததும், கொலை நடந்த ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சந்தேக நபர் இருவரும் சந்தித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும், ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளின் படி, கொலை நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, சந்தேக நபர் ரீட் அவென்யூ வழியாக விளையாட்டு அமைச்சைக் கடந்து கொழும்பு பல்கலைக்கழகத்தை நோக்கி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சந்தேகநபர் நேற்று மாலை வெல்லம்பிட்டியவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவரை அணுகியபோது, அவர் ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார், ஆனால் தடுக்கப்பட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
