பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க சட்டத்தின் ஆதரவை கோருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (19.01) காலை ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் கூட்டுத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (20.01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“ஜனாதிபதி என்னைச் சந்திக்க விரும்புவதாகச் கூறினார். நான் காத்திருந்தேன். ஆனால் என்ன நடந்தது… ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் நான் இல்லாமல் ஜனாதிபதியை சந்தித்தனர். நாங்கள் எடுத்த கூட்டு முடிவு நேற்று மாறியது.”
“இப்போது சொல்கிறார்கள்… அமைச்சரவையின் பரிந்துரையின்படி, விலை உயர்வை விரைவில் அமல்படுத்தி, அடுத்த விலை திருத்தத்தில் மாற்றியமைக்க வேண்டும், என்று”
“சட்டத்தின் முன் சென்று தேவையான நிவாரணம் கேட்பேன். அது முடியாவிட்டால் சிஸ்டம் இல்லை. பெரும்பான்மை மக்களின் விருப்பத்தில்தான் அதிகாரம் உள்ளது.”
“அமைச்சரவை முடிவை நிராகரித்து மின்சார வாரியத்தின் விலை திருத்தத்தை தொடர நாங்கள் கூட்டாக முடிவு செய்தோம்.”
நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாகவே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் “இந்த ஆணையத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நான் பாடுபடுவேன்.”
இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டுமென தேசிய சபை தெரிவிக்கின்றது.
நேற்று (19.01) பிற்பகல் மின் கட்டண உயர்வு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதன் பின்னர் தேசிய பேரவையின் தலைவரும் சபாநாயகருமான மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, உரிய கலந்துரையாடல்களின் பின்னர் இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் தேசிய சபைக்கு அழைத்து உரையாடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இலங்கை மின்சார சபையினால் கொண்டுவரப்பட்டுள்ள மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் தீர்மானம் வழங்க வேண்டுமென மின்சார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
