யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் போரின் போது பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட சுமார் 109 ஏக்கர் காணி நாளை (03.01) காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 04ம் திகதி நடைபெறவுள்ள 75வது சுதந்திர தின நிகழ்விற்கு முன்னர் வடக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கையளிக்கப்படவுள்ள காணிகளில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட 05 காணிகளும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட ஒரு காணியும் உள்ளடங்குவதாகவும், குறித்த காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வட பலாலி பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 13 ஏக்கர் காணியும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து பெதுருதுடுவவில் 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
விடுவிக்கப்படவுள்ள பகுதியில் அமைந்துள்ள மாநகர சபை மண்டபம் நாளை வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்றப்படவுள்ள 197 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
