இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இந்தியா நாக்பூரில் நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரின் முதற் போட்டியில் இந்தியா அணி ஒரு இன்னிங்சினாலும் 132 ஓட்டங்களினாலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் சிறப்பான துடுப்பாட்டம், அபாரமான பந்துவீச்சு மூலமாக மூன்றாம் நாளில் நாளில் இந்தியா அணி அபாரமான வெற்றியினை பெற்றுக் கொண்டது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்சில் இந்தியா அணியின் பந்துவீச்சில் தடுமாறிப்போனது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரம்ப விக்கெட்களை உடைத்துக் கொடுக்க தொடர்ந்து அழுத்தங்களை வழங்கி சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
உபாதைகளிலிருந்து மீண்டு வந்த ரவீந்தர் ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஜடேஜாவின் 11 ஆவது ஐந்து விக்கெட் பெறுதி இதுவாகும். அஷ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களை கைப்பற்றிய ஒன்பதாவது பந்துவீச்சாளர் என்ற மைற்கல்லை தாண்டினார். அணில் கும்ளேயிற்கு அடுத்த படியாக 450 விக்கெட்களை அஷ்வின் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்னஸ் லபுஷேன் 49 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 37 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரி 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 400 ஓட்டங்களை பெற்றது. ரோஹித் ஷர்மா தனது ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்து நல்ல ஆரம்பத்தை வழங்கினார். 120 ஓட்டங்களை அவர் பெற்றுக்கொணடார். அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் வழங்கிய அழுத்தத்துக்கு மத்தியில் பின் மத்திய வரிசை வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். குறிப்பாக ரவீந்தர் ஜடேஜாவின் துடுப்பாட்டம் இந்தியா அணிக்கு பெரிதும் கைகொடுத்தது. அவர் 70 ஓட்டங்களை பெற்றார். அக்ஷர் பட்டேல் 84 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஜடேஜா- பட்டேல் ஜோடி 88 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
துடுப்பாட்டத்தில் மூன்றாமிலக்கத்தில் களமிறங்கிய அஷ்வின் 23 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். விராத் கோலி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர்கள், ஸ்ரீஹர் பரத், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலியா அணிக்கு அறிமுகம் மேற்கொண்ட ரொட் மேர்பி ஏழு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பட் கம்மின்ஸ் 2 விக்கெட்களையும், நேதன் லயோன் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.
இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தோல்வியினை சந்தித்தது. அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 91 மட்டுமே பெற்றது. இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசினர். அஷ்வின் அவரின் 31 ஆவது 5 ஆவது விக்கெட்டினை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். அக்ஷர் படேல் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் நாயகனாக ரவீந்தர் ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார். இந்தியா அணி 4 போட்டிகளடங்கிய தொடரில் 1 -0 என முன்னிலை பெற்றுள்ளது.
