500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை திறந்து எப்படி?

முன்நாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் 500 வீடுகளே மலையகத்தில் கட்டியுள்ளார் என பாராளுமன்றத்தில், தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தற்போது எவ்வாறு 1235 வீடுகளை ஒரே நாளில் திறந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய முதல் கட்ட 50,000 ஆயிரம் வீடுகளில் வெறும் 4000 வீடுகள் மாத்திரமே மலையகத்திற்கு வழங்கப்பட்டன. 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட வீடுகளுக்கான கோவைகள் அப்போதைய மலையக அமைச்சரால் 2015ம் ஆண்டுவரை பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருந்ததன.

2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் அந்த 4000 வீடுகளுக்கான கோவையை தூசி தட்டி எடுத்து அதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து வீட்டுத் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் என்பதை முழு மலையக மக்களும் அறிவர்.

வீடுகளை கட்டிக் கொடுக்க பயனாளிகளுக்கு ‘ சொந்த காணி் இருக்க வேண்டும்’ என்பது இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையாக இருந்தது. கம்பனிகளில் கீழ் இருக்கும் காணிகளில் வீடுகளை கட்ட அவர்கள் விரும்பவில்லை. அப்போதைய மலையக அமைச்சருக்கு பெருந்தோட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க சொந்த காணி பெற்றுக் கொடுக்க முடியவில்லை. விருப்பமும் இல்லை என தனது அறிக்கையில் பழனி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் பழனி விஜயகுமார் மேலும் இவ்வாறு தெரிவித்தார்

தமிழ் முற்போக்கு கூட்டணி அந்த தடையை உடைத்தெறிந்து தலா 7 பேர்ச் காணியில் வீடுகளை கட்ட அமைச்சரவை அனுமதி பெற்ற பின் வீடமைப்புத் திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் மத்திய மற்றும் ஊவா மாகாணம் என நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இந்த 4000 வீடமைப்புத் திட்டத்தை முழு மலையகத்திற்கும் விஸ்தரித்தவர் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் என்பதே மறுக்க முடியாத உண்மை.

அதன்படி வாக்குகள் கிடைக்கும் நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் சேவை செய்யாது பதுளை, கண்டி, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களுக்கும் வீடமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டன.

இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட லிடெஸ்டெல் 166, பொகவந்தலாவ 155, டொரிங்டன் 100, காலியில் 50, பதுளையில் 479, கண்டியில் 184 என 1235 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடும் கடந்த அரசாங்கத்தில் செய்யப்பட்டது. ஆனால் திடீர் ஆட்சி மாற்றத்தால் குடிநீர், மின்சார வசதிகளை பூரணபடுத்த முடியவில்லை.

எனவே அமைச்சர் திகாம்பரம் தலைமையில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதை மறுக்க முடியாது. இவ்வாறு இன்னும் 1000 வீடுகள் வரை மக்களிடம் கையளிக்கப்பட வேண்டி உள்ளது.

கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடியேற தேவையான வசதிகளை செய்து கொடுத்த விடயம் பாராட்டுக்குரியது. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் பொய் கூறி மக்களை ஏமாற்றி பெயர் போட்டுக் கொள்ளும் முயற்சி மிகவும் கேவலமானது.

மலையக மக்களை தொடர்ந்து முட்டாள்களாக நினைத்து இவர்கள் செயற்படுவதையே இந்த பொய் சுட்டிக்காட்டுகிறது.

500 வீடுகளே கட்டியதாக புழுகிவிட்டு, 1235 வீடுகளை  திறந்து எப்படி?
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version