ரஷ்யாவின் புகழ்பெற்ற இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ தற்போது தி சேலஞ்ச் எனும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்தப் திரைப்படத்தின் கதையானது விண்வெளியில் ஏற்படும் ஒரு மருத்துவ நெருக்கடி தொடர்பான கதையென அறியமுடிகின்றது.
இத் திரைப்படத்திற்காக இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை ஜூலியா பெரெஸ்லிட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் சோயூஸ் எம் எஸ்-19 எனப்படும் ரொக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்தின் ரஷ்யாவிற்குரிய பகுதியில் இத்திரைப்பட படப்பிடிப்பு நிகழவுள்ளதாகவும், இத்திரைப்படத்திற்கான நிதியுதவியை ரஷ்யாவின் சனல் வன் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
12 நாட்கள் படப்பிடிப்பின் பின்னர் அவர்கள் பூமிக்குத் திரும்பவுள்ளதுடன் அதன்போது, ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரர் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்களுடன் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற திரைப்படங்களை எடுக்க விரும்பும் மேற்கத்தைய நாடுகளுக்கு தாம் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக குறித்த ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.