உரிய திட்டங்களற்ற வரி விதிப்பின்னால் மக்களுக்கு பாதிப்பு – ஜனகன்

வரி விதிப்பு மூலம் கிடைக்கும் பணம் வீணடிக்கும் நிலையே காணப்படும் நிலையில் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி தனது ஆதரவினை வழங்குவதாக அந்த அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி ஜனகன் அறிவித்துள்ளார்.

“தொழிற்சங்கங்கள் வரி விதிப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் களமிறங்கியுள்ளன. அவர்களது போராட்டம் நியாயமானது. நாட்டை மீட்டெடுக்க வரிதான் வழி என கூறிகொண்டு மிகவும் கடுமையான வரியினை அரசாங்கம் விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சாதாரண மக்களையும் அதிகமாக பாதிக்க வைத்துள்ளது. நேரடியாக வரி செலுத்தாதவராக இருந்தாலும், அவர்களும் மறைமுகமாக இந்த வரிவிதிப்புக்கள் சிக்கியுள்ளனர்.

வரி விதிப்பை அறிவித்துள்ள அரசாங்கம் அதன் நடைமுறைகள் தொடர்பில் இதுவரையில் முறையாக அறிவிக்கவில்லை. பலருக்கு தாம் வரி செலுத்துகைக்கு உட்பட்டுள்ளோமா இல்லையா என்பது கூட தெரியாத நிலையில் காணப்படுகின்றனர். வரி விதிப்பு, வரி சீர்திருத்தம் என்பன அமுற்படுத்தப்பட்டால் அவை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். அரசாங்கம் அவை எதனையும் செய்யவில்லை. இது உண்மையில் சர்வாதிகார போக்கு. இந்த போக்கே இன்று தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் களமிறங்க காரணமாக அமைந்துள்ளன” என ஜனகன் வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் ஊடக அறிக்கையின் மேலதிக விடயங்கள் கீழுள்ளன

வரி சீர்திருத்தம் செய்த அரசாங்கம் உரிய திட்டங்களை இன்று வரை அறிவிக்கவில்லை. வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை எவ்வாறான செயற்பாடுகள் மூலம் நடைமுறைப்படுத்தவுள்ளார்கள், எவ்வாறு கடன் மீள் செலுத்துகை திட்டங்கள் மற்றும் நாட்டை மீட்டெடுக்கும் திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள் போன்றவை தொடர்பில் எதுவும் இதுவரை அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.

இந்த வருடம் நாட்டை மீட்டெடுக்கும் வருடம் என அறிவித்தார்கள். இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் பாரிய முன்னேற்றம் எதுவுமில்லை, மாறாக போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. மீண்டும் நாடு கடந்த வருட ஆரமப கட்டத்தினை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

வரி சீத்திருத்தம் தேவையான ஒன்று. நாட்டை மீட்டெடுக்க வேறு வழியில்லை. ஆனால் அரசாங்கத்திடம் மாற்று திட்டங்களின்றி வெறுமனே இவ்வாறன வரி அதிகரிப்பால் நாட்டை எவ்வாறு மீட்க முடியும்? நாட்டில் காணப்படுகின்ற ஊழல்கள் சீர்செய்யப்பட்டுள்ளனவா? ஊழல் காரணமாகவே நாட்டில் இவ்வாறன நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் தெரிவித்தார். ஆனால் அவை பற்றி ஜனாதிபதியான பின்னர் அது தொடர்பில் எதுவும் பேசுவதில்லை. ஊழல், பணம் வீணடிப்பு செய்தல் போன்றவை நீக்கப்படாமல் மக்களிடம் வரி என்ற போர்வையில் பணத்தை பெற்றுக்கொண்டு அவை மீண்டும் கடந்த காலம் போன்று நாசம் செய்யப்பட்டால் மக்களின் நிலை என்னாவது?

ஆகவே அரசாங்கம் உரிய சரியான திட்டங்களை அறிவிக்காத நிலையில், நடைமுறைப்படுத்தாத நிலையில் நாட்டை மீட்டெடுப்பது கடினமான விடயமே. இவ்வாறான நிலையில் தொழிற்சங்க போராட்டங்கள் தொடரத்தான் செய்யும். மக்கள் போராட்டங்களை தடுப்பது கடினமாகவே அமையும்.

இன்று தொழிற்சங்கங்கங்களினால் முன்னடுக்கும் போராட்டத்துக்கு, தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியும் தனது முழுமையான ஆதரவினை வழங்குகிறது.

உரிய திட்டங்களற்ற வரி விதிப்பின்னால் மக்களுக்கு பாதிப்பு - ஜனகன்

Social Share

Leave a Reply