வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூசைக்கு மூவர் மாத்திரமே அனுமதி என வவுனியா வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது இந்து ஆலயங்களை முடக்கும் செயல் என சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அரசாங்க சுகாதர வழிகாட்டுதல்களின் படி ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இன்னமும் வழங்கபபடவில்லை. ஆனால் வவனியாவில் அது தொடர்பில் இறுக்க நிலைகளை கடைபிடிக்காமல் தளர்வு நிலை வழங்கப்பட்டது.
ஆனால் ஆலயங்களில் அளவுக்கு அதிகமான மக்கள் ஒன்று கூடுகின்றனர். குறிப்பாக புரட்டாதி சனி விரத நாளில் கட்டுப்படுத்த முடியாதளவு அதிகளவான மக்கள் ஆலயங்களில் ஒன்று கூடியுள்ளனர். அதன் காரணமாக மீண்டும் இறுக்கமான நிலையினை கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என வவுனியா சுகாதர துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வழங்கப்படும் வாய்ப்புகளை தவறாக பாவித்துவிட்டு தம்மை மட்டும் குறை கூறக்கூடாது. வழமையான திருவிழாக்கள் எனில் உபயகாரர்கள், யார் என்பது தெரியும். நவராத்திரி பூசைகளில் அனைவரும் கலந்து கொள்வார்கள். யார் என இனம் காண முடியாத சூழல் உருவாகும். ஆகவேதான் இந்த கட்டுப்பாட்டினை செயற்படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் நவராத்திரி பூசைகளை நடத்துவதில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்களை திட்டமிட்டு முடக்கவோ, மூடவே யாரும் முனையவில்லை. அதற்கு இடம் வழங்கப்படாது எனவும் சுகாதர தரப்பால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குருக்கள் ஒருவரை வி தமிழ் தொடர்பு கொண்ட கேட்ட போது ” மக்களும் ஆலய நிர்வாகங்களும் இந்த கொரோனா நிலையை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். சில கட்டுப்பாடுகளை ஏற்று அதற்கு ஏற்றால் போல நடந்து கொள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடு தேவையான ஒன்றாக கருதுவதாக அவர் தெரிவித்தார்”.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா அந்தணர் ஒன்றிய தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் பூசைகளில் ஈடுபட்டுள்ளமையினால் தொடர்பு கொள்ள முடியவில்லை.