கொழும்பில் அமைந்துள்ள இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியான வாப்பா(Visual and Performing Arts) தொலைக்காட்சியின் தலமையதிகாரியாக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (03:03:2023) இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ரோஹன P.மஹாலியனாராச்சி, வி.ஜனகன் ஆகியோர் இந்த நியமனத்துக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
வாப்பா தொலைக்காட்சி இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது. கல்வி-பொழுது நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றனர்.
இவ்வாறன நிலையில் இந்த தொலைக்காட்சின் சேவையின் நிகழ்ச்சிகளை மேம்படுத்தவும், வர்த்தக ரீதியில் வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் கலாநிதி ஜனகன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக உப வேந்தர் பேராசிரியர் ரோஹன P.மஹாலியனாராச்சி கூறியுள்ளார். VAPA தொலைக்காட்சி Peo TV இன் தளத்தில் 123 என்ற அலைவரிசையினூடாக ஒளிபரப்பாகின்றது. அதேவேளை மிக விரைவில் Dialog அலைவரிசையூடாகவும் ஒளிபரப்பாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இயங்கும் ஊடகங்களும், சமூக வலைத்தள ஊடங்களும் பெரும்பாலும் இனவாதம் மற்றும் மதவாதம் கொண்டவையாகவே நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. சமூக வலைத்தளங்களிலும் நிகழ்ச்சிகளை செய்பவர்கள் பலரும் மதங்களை மற்றும் இனங்களை புண்படுத்தும் எதிர்மறையான நிகழ்ச்சிகளை வழங்குவதை அவதாணிக்க முடிகின்றது.
ஆகவே, எமது VAPA தொலைக்காட்சியில் அவ்வாறல்லாமல் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், இனம் மதமின்றி எவ்வாறு ஒருமைப்பாட்டுடன் ஒருசேர கல்வி கற்கிறார்களோ அதே போன்று தேசிய ஒருமைப்பாடுள்ள நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளதாக கலாநிதி ஜனகன் கூறியுள்ளார்.
இனம், மத வேறுபாடுகளின்று ‘அனைவரும் இலங்கையர்கள்’ என்ற குறிக்கோளுடன் எதிர்கால நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவுள்ளன. வழமையான தொலைக்காட்சிகளிலிருந்து மாறுபட்டு இலங்கையர்கள் அனைவருக்கும் பயன் தரும் வேறுபாடான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவுள்ளதாக மேலும் அவர் கூறினார்.
முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களது திறமையினை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்த தொலைக்காட்சி பயன்படுத்தப்படும். அதேவேளை, இலங்கை கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட கல்வி கற்கைநெறிகளை வாப்பா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினூடாக கற்பதற்கான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வாப்பா தொலைக்காட்சி எதிர்காலத்தில் ஏனைய ஊடங்கள் போன்று அனைவருக்குமான தொலைக்காட்சி சேவையாக அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் தொலைக்கட்சி சேவையாக மாற்றப்படுமெனவும் ஜனகன் நம்பிக்கை வெளியிட்டார்.