இந்தியாவின் முன்னாள் விசேட தூதுவர் பார்த்தசாரதி – மனோ கணேசன் விசேட சந்திப்பு!

இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் இலங்கைக்கான விசேட தூதுவர் “ஜீபி” என்றழைக்கப்படும் கோபாலசுவாமி பார்த்தசாரதி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை நேற்று கொழும்பில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் இந்திய தூதரக இரண்டாம் செயலாளர் அசோக்குமார் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்.பி கூறியதாவது,

”இக்கட்டான காலங்களில், இலங்கை, இந்தியா, தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய அனைத்து தரப்புகளுக்கும் இடையே இயன்ற வரையில் நெகிழ்வு தன்மையுடன் சுழன்றோடி நம்பிக்கை தந்து, ஈடிணையற்ற பணிகளை ஆற்றியவர் திரு. கோபாலசுவாமி பார்த்தசாரதி என்பதை அந்த இக்கட்டான நாட்களை கடந்து வந்தவர்கள் மறக்க முடியாது”. என தெரிவித்துள்ளார்.

தற்போது புதுடில்லி வான்வெளி சக்தி தொடர்பான இந்திய நிறுவனத்தில் இயக்குனராகவும், ஜம்மு பல்கலைக்கழகத்தின் உத்தியோகப்பூர்வ வேந்தராகவும், இந்திய கொள்கை வகிப்பில் உத்தியோகப்பற்றற்ற பங்காளராகவும் பார்த்தசாரதி பணியாற்றுகிறார்.

”நேற்றைய சந்திப்பின் போது, 1983-2023, இடைப்பட்ட இந்த 40 வருடங்களில் நிகழ்ந்துவிட்ட புதிய மாற்றங்களை, என் பார்வையில் அவருக்கு எடுத்து கூறினேன். தமிழ் தரப்பில் இந்திய வம்சாவளி மலையக எழுச்சியை பற்றியும், ஈழத்தமிழ் மக்களின் இடை நிற்கும் ஆதங்கங்களை பற்றியும் உரையாடினோம். இலங்கை இந்திய உறவுகள், சர்வதேச புதிய நியமங்கள் பற்றியும் உரையாடினோம்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் விசேட தூதுவர் பார்த்தசாரதி - மனோ கணேசன் விசேட சந்திப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version