சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பெற்றுக்கொண்ட உணவு மற்றும் பானங்களுக்கான பணத்தை தரவில்லை எனக் கூறி அவரை மோசமாக தாக்கிய சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுவீடன் நாட்டு சுற்றுலா பயணியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சுற்றுலா பயணி பொத்துவில் நெடுஞ்சாலை வழியே காயமடைந்த நிலையில் சென்றபோது, பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின்போது சுற்றுலா பயணியிடம் இருந்த 300 யூரோக்கள் மற்றும் கைத்தொலைபேசி ஒன்றையும் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.