இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என காற்பந்தாட்ட சுப்பர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள நிர்வாக அமைப்பு மற்றும் காற்பந்து நிர்வாக முறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று நேற்று (27.03) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் விளையாட்டு அமைச்சில் காற்பந்தாட்ட பிரதிநிதிகள் குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.
இக்கலந்துரையாடலில் முன்னைய காற்பந்தாட்ட நிர்வாகத்தின் பல உள்விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் கால்பந்து நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகளின்படி, அவர்கள் தங்களை பதிவுசெய்துள்ளனர் எனினும் இதுவரை அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை என இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை காற்பந்து லீக்குகள் மற்றும் கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி பெறப்படவில்லை என்றும், பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 14 அன்று விளையாட்டுத்துறை அமைச்சர் பிறப்பித்த விளையாட்டுச் சட்ட திட்ட திருத்தங்கள் சிறப்பானது என பல தரப்பினரும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தமை நினைவுபடுத்தப்பட்டதுடன், சிறந்த நிர்வாகத்திற்கு அனைத்து பழைய அதிகாரிகளையும் நீக்கிவிட்டு, மோசடி மற்றும் ஊழல் இல்லாத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் பொறுப்பை புதிய அணியொன்று பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் காற்பந்து நிர்வாகத்தையும் விளையாட்டின் மீதுள்ள அன்பையும் ஏற்படுத்துவதற்காக விளையாட்டுடன் தொடர்புடைய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட விரும்புகின்றனர். அத்தகையவர்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட போட்டிகளின் விளையாட்டு அதிகாரிகள், சம்பியன்ஸ் லீக்கின் தலைவர் சாகர பிரியதிலக, சுப்பர் லீக் கழகத் தலைவர் ரோஹித் பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.