போர்த்துக்கல், லிஸ்பனில் உள்ள இஸ்மாயிலி முஸ்லிம் நிலையத்தில் இரண்டு பெண்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் உடனடியாக அறியப்படாத போதிலும், குறித்த பெண்கள் அந்த நிலையத்தில் ஊழியர்களாகப் பணி புரிந்தவர்களென இஸ்மாயிலி சமூகத் தலைவர் நர்சிம் அகமது போர்த்துக்கல் தொலைக்காட்சி ஒன்றிற்குத் (SIC)தகவல் அளித்துள்ளார்.
நேற்று(29.03) காலை பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டபோது, அங்கு அவர்கள் பெரிய கத்தியுடன் காணப்பட்ட சந்தேக நபரை எதிர்பார்க்காத வேளையில் சுற்றி வளைத்து சரணடையக் கோரினர். குறித்த நபர் சரணடையாமையால் பொலிசார் மேற்கொண்ட தாக்குதலில், பல பொதுமக்களும் காயமடைந்தனர் என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. காயமடைந்தோர் தொடர்பில் தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லிஸ்பன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலானது ஒரு குற்றச் செயல் எனவும் இதன் உள்நோக்கம் பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இது குறித்து கருத்து கூறியுள்ளார்.