சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட்டுக்கள் அமைச்சின் தலையீடுகள் இருப்பது தொடர்பில் விசாரிக்க மூன்று பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடங்களில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவர் கிரெக் பார்க்லேயிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
விளையாட்டு அமைச்சராக, இலங்கையின் விளையாட்டுத்துறை சார்ந்த நிறுவனங்கள், சில அடிப்படை தகுதிகளுடன், உயர் கொளகைகளுடன் இலங்கை தேசிய சட்ட திட்டங்களுக்குள் முழு சுதந்திரமாக இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
“ஊழல் மற்றும் போதை தடுப்பு ஆகியவை உள்ளடங்கலாக சட்டதிட்டங்களுக்கு அமைவாக இலங்கையில் நடைமுறையிலுள்ள விளையாட்டு சட்ட நடைமுறைகளுக்கு விளையாட்டு அமைச்சராக நான் அதனை உயர் தரத்தில் பேணுவதற்காக பொதுவான மற்றும் விசேட வழிகாட்டுதல்களுக்கிணங்க சகல விளையாட்டு தொடர்பிலான நிறுவனங்களுக்கும் எழுத்து மூலமாக நடைமுறைப்படுத்துதல், பேணுதல் மற்றும் இரத்து செய்தல் போன்ற விடயங்களை அறிவித்துள்ளேன்” என அமைச்சர் கடித்ததில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடாத்தவும், அதற்குரிய நேரத்தை ஒதுக்கி தரவும் எதிர்பார்த்துள்ளதாகவும் தனது கடிதத்தில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
