தலைமன்னாரில் கப்பல் போக்குவரத்து சேவையுடன் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தபட வேண்டும்!

தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘இராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் வடபகுதியிலுள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையான தனுஷ்கோடிக்குமிடையிலான இராமர் பாலம் பகுதியை அபிவிருத்தி செய்து, அதன்மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமன்னார் முனையத்தை அபிவிருத்தி செய்வதால் ஏற்படும் சாதகத் தன்மை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், இ.தொ.காவின் பொதுச்செயலாளர், நீர்வழங்கல்,தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவரும், இந்திய முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version