தொழிலாளர் தேசிய சங்கம் அனைவருக்கும் சேவை வழங்கும் – உதயா MP

தொழிலாளர் தேசிய சங்கம், மக்களுக்கான சேவைகளை செய்ய அவர்களுக்கான தேவைகளை வழங்க ஒரு போதும் கட்சி பேதங்களை பார்க்காது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சங்க தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தை எப்போதும் நாடலாம் என திலகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை

தொழிலாளர் தேசிய சங்கம் என்பது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க நலனுக்காக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொழிற்சங்கத் துறவி அமரர் வி.கே வெள்ளையன் அவர்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமாகும்.


நுவரெலியா மாவட்டம் மாத்திரமன்றி பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, குருநாகல் மாத்தளை போன்ற மலையக மக்கள் வாழும் மாவட்டங்களிலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.


தொழிற்சங்க பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மலையகத் தொழிலாளர்கள் எவ்வித தயக்கமும் இன்றி எந்த நேரத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை நாடி தங்களுடைய பிரச்சினைகளை முன்வைக்க முடியும்.


தொழிற்சங்க பேதம் பாராமல் பணியாற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனையின் கீழ் தொழிற்சங்க பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்த விடயத்தில் தொழிற்சங்க சந்தா எமக்கு ஒருபோதும் தடையாக இருக்காது.


தொழிற்சங்க சந்தா பெற்றாலும் பெறாவிட்டாலும் தொழிலாளர்களுக்கான சேவை தொடர்ந்து கொண்டே இருக்கும். கூட்டு ஒப்பந்தம் என்ற அடிமை சாசனத்திற்கு எதிரான கொள்கையில் தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்தும் உள்ளது. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.


மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற வலைக்குள் பின்னப்பட்டு நசுக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதனால் கூட்டு ஒப்பந்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும்.


தொழிற்சங்க பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு பொதுவான பொறிமுறை ஒன்று அவசியமே தவிர ஒரு சிலருக்கு மாத்திரம் சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் அதிகளவு வீடுகளை பெற்று பயன் பெற்றவர்கள் மாற்று தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களே. எனவே தொழிலாளர்களுக்கு எவ்வித பேதமும் இன்றி மக்களுக்கு சேவைகளை வழங்க தொழிலாளர் தேசிய சங்கம் எப்போதும் தயார் நிலையில் உள்ளது.

அதில் மலையக மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொழிற்சங்க பேதத்தை முன்வைத்து தொழிலாளர்களுக்கான சேவைகளை புறக்கணிக்கும் அளவிற்கு தொழிலாளர் தேசிய சங்கம் பிற்போக்கான தொழிற்சங்கம் அல்ல என்பதை கூறி வைக்க விரும்புகிறோம்.”

என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் அனைவருக்கும் சேவை வழங்கும் - உதயா MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version